நம்மாழ்வார் உபதேச ரத்ன மாலை…!

தூத்துக்குடி மாவட்டம் திருக்குருகூரில் காரியாருக்கும் உடையநங்கையாருக்கும் வைகாசி மாதம் பவுர்ணமி திதி, விசாக நட்சத்திரம், கடக லக்னம், வெள்ளிக்கிழமை அன்று நம்மாழ்வார் அவதரித்தார். விஷ்வ சேனரின் அம்சமாக, அதாவது, சேனை முதலிகள் எனக் கொண்டாடப்படுபவராக அவர் அவதரித்தார் எனப்போற்றுகின்றனர்

வைஷ்ணவப் பெரியோர்.நம்மாழ்வார் அவதரித்த வைகாசி விசாகத்தின் பெருமையைப் போற்றுகிறது. மாறன் என்று பெயர் சூட்டப்பட்ட அவர் திருக்குருகூர் பெருமாள் ஆலயப் பிராகாரத்தில் புளிய மரத்தில் தொட்டில் கட்டி,

அதன் நிழலில் தியானத்தில் அமர்ந்தார். பின்னாளில், திருமாலின் திருவடியே கதியென்று நம்மாழ்வார் மாறினார். 16 வயது வரை அந்தப் புளிய மரத்தடியில், யோக நிலையிலேயே இருந்தார் மாறன். மெள்ள மெள்ள, ஞானகுருவாக சகல வேதங்களும் கற்றறிந்த ஆச்சார்ய புருஷ்ராக அவருக்குள் தேஜஸ் குடிகொண்டது.

திருக்கோளூரில், தோன்றிய மதுரகவி ஆழ்வார் மாறனின் மகிமையை உணர்ந்து பூரித்தார். நீங்களே என் ஆச்சார்யர் என வணங்கினார். பிறகு மாறனுக்குப் பணிவிடை செய்வதையே தனது கடமையாக கொண்டு அவருடனேயே இருந்தார்.

மாறன் என்கிற நம்மாழ்வார், பகவானிடம் இருந்து தாம் பெற்ற சிறப்புகளையெல்லாம் பாசுரங்களாகப் பாடி அருளினார். திருவிருத்தம் திருவாசிரியம் பெரிய திருவந்தாதி,

திருவாய்மொழி ஆகிய அற்புதமான நூல்களை உலகுக்கு அளித்தார் அதனால்தான் ஆழ்வார்களில் தலைவராக நம்மாழ்வார் கொண்டாடப்படுகிறார்.

பெருமாளின் திருவடியில் நிலையாக சடாரியாகத் திகழ்கிறார் நம்மாழ்வார். அதனை சடாரி, சடகோபன் என்றெல்லாம் சொல்கிறோம். மாறன், காரிமாறன், சடகோபன், பராங்குசன், குருகைப்பிரான், திருக்குருகூர் நம்பி, வகுளாபரணன், அருள்மாறன், தென்னரங்கள், பொன்னடி, திருநாவீறுடையபிரான் என்றெல்லாம் அழைக்கப்பட்டார்.

என்றாலும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் இவர், நம் ஆழ்வார் என அழைத்ததால், அவருக்கு நம்மாழ்வார் எனும் பெயரே நிலைக்கப்பெற்றது. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் 1,269 பாசுரங்களை இனிக்க இனிக்கப்பாடி பரம்பொருளைப் போற்றியுள்ளார் நம்மாழ்வார். 39 திவ்விய தேசங்களின் அருள் சிறப்படையும் போற்றி பாடியுள்ளார் அவரை வணங்கினால் வளம் பெறலாம்.

Sharing is caring!

Translate »