கோலி, சுமித், வில்லியம்சனை விட ஜோரூட் சிறந்த பேட்ஸ்மேன்- இந்திய முன்னாள் தேர்வு குழு உறுப்பினர்…

இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் ஜோரூட். டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின்னர் முதல் போட்டியில் அவர் சதம் அடித்தார்.

அவரது சிறப்பான ஆட்டத்தால் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற முடிந்தது. 31 வயதான ஜோரூட் 115 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதன் மூலம் அவர் டெஸ்டில் 10 ஆயிரம் ரன்னை தொட்டார்.

இந்த ரன்னை எடுத்த 14-வது வீரர் ஆவார். ஜோரூட் 118 டெஸ்டில் 10,015 ரன் எடுத்துள்ளார். சராசரி 49.57 ஆகும். 26 சதமும், 53 அரை சதமும் அடித்துள்ளார். லார்ட்ஸ் மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்தை வெற்றி பெற ஜோரூட்டின் ஆட்டத்தை கங்குலி, மார்க்டெய்லர் உள்ளிட்ட முன்னாள் கேப்டன்கள் பாராட்டி இருந்தனர். டெஸ்டில் அதிக ரன் எடுத்த தெண்டுல்கரின் சாதனையை ஜோரூட் முறியடிப்பார் என்று டெய்லர் கருத்து தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் விராட்கோலி, ஸ்டீவ் சுமித், வில்லியம்சன் ஆகியோரை விட ஜோரூட் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தேர்வு குழு உறுப்பினரான சபாகரீம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- ஜோரூட் வெகுதூரம் முன்னேறி சென்று இருக்கிறார்.

இங்கிலாந்தின் பேட்டிங்கை பார்த்தால் அவரது பெயர் மட்டுமே மீண்டும் மீண்டும் வருகிறது. ஜோரூட்டுக்கு மறுமுனையில் இருந்து ஆதரவு கிடைக்கவில்லை. இந்திய அணியை சொல்ல வேண்டுமானால் விராட்கோலியுடன் லோகேஷ், ராகுல், ரோகித் சர்மா, ரிஷப்பண்ட் போன்றோரில் அவருக்கு இணையாக ஆடி ஆதரவு கொடுத்துள்ளார்கள்.

நியூசிலாந்து, ஆஸ்திரேலியா இதே நிலைமையில்தான் இருக்கிறது. எந்த ஆடுகளத்தில் விளையாடினாலும் ஜோரூட் தனித்துவம் பெற்றுள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மற்ற 3 பேட்ஸ்மேன்களை (விராட்கோலி, ஸ்டீவ்சுமித், வில்லியம்சன்) விட அவர் பின்தங்கி இருந்தார். தற்போது அவர்கள் அனை வருக்கும் மேல் இருக்கிறார். கடந்த 2 ஆண்டுகளாக ஜோரூட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

4-வது இன்னிங்சில் ஜோரூட் சதம் அடித்தார். இது எளிதல்ல. போல்ட், ஜேமிசன் உள்ளிட்ட சிறந்த பவுலர்கள் நியூசிலாந்து அணியில் உள்ளனர். தொழில்நுட்ப ரீதியாகவும், மன ரீதியாகவும் அவர் வலிமையானவர் என்பதை இந்த ஆட்டம் மூலம் தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார். இவ்வாறு சபாகரீம் கூறியுள்ளார்.

Sharing is caring!

Translate »