கருமத்தம்பட்டி அருகே மதுபாட்டில்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து…!

சென்னை பூந்தமல்லி மதுபான கிடங்கில் இருந்து பீளமேடு டாஸ்மாக் மதுபான கிடங்குக்கு பல லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்களை ஏற்றிக்கொண்டு லாரி வந்தது. லாரியை பவானி, கவுந்தப்பாடி பகுதியைச் சேர்ந்த செல்லப்பன் (வயது 59) என்பவர் ஓட்டி வந்தார்.

உடன் கிளீனரும் இருந்தனர். இந்நிலையில் லாரி பீளமேடு செல்வதற்காக கருமத்தம்பட்டி அரசு பஸ் பணிமனை அருகே இன்று அதிகாலை வந்தது. அப்போது லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் லாரி எதிர்பாராதவிதமாக சாலை தடுப்பு சுவரில் மோதி அருகே உள்ள சர்வீஸ் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கருமத்தம்பட்டி போலீசார் காயமடைந்த லாரி டிரைவர் செல்லப்பனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து டாஸ்மாக் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த டாஸ்மாக் அதிகாரிகள் சேதமான மதுபாட்டில்களை ஆய்வு செய்து அதன் மதிப்பை கணக்கிட்டு வருகின்றனர். மேலும் இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து நடந்த இதே இடத்தில் கடந்த மாதம் பெங்களூரில் இருந்து கோவை நோக்கி பெயிண்ட் லோடு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த பகுதியில் தொடர்ந்து விபத்து ஏற்படுவதால் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் இருந்து வருகிறது. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விபத்துகள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Sharing is caring!

Translate »